காதலை கைவிட்டதால், கல்லூரி மாணவியை இரும்புக் கம்பியால் தாக்கிய காதலன்.. மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் மாளவியா நகரில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள பூங்காவில், 25 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல் நடந்த இந்த சம்பவத்தில் அந்த மாணவி அங்கேயே உயிரிழந்துள்ளார். இதன்பின் தகவல் அறிந்து, தெற்கு டெல்லியின் டிசிபி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டிசிபி சந்தன் சவுத்ரி கூறியதாவது, ”மாளவியா நகரில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களது முதற்கட்ட விசாரணையில் அவர் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.
இதனையடுத்து, மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்தனர். பின்னர் இந்த முழுப் பிரச்னையும் காதல் மற்றும் திருமணத்தை மறுத்ததால் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் வேலையில்லாமல் இருந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளதாகவும், இதைனால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியதாகவும் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், மாணவியை கொலை செய்துள்ளதாகவும் தெற்கு டெல்லியின் டிசிபி சந்தன் சவுத்ரி கூறினார். மேலும், அந்த இளைஞன் டெலிவரி செய்யும் பணிபுரியும் இர்பான் என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது.







