மணிப்பூர் செல்லும் எதிர்கட்சிகளின் எம்பிக்கள் குழு! தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, தொல்.திருமாவளவன், ரவிக்குமார் செல்கின்றனர்!!!

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் குழு 2 நாள் பயணமாக நாளை மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல உள்ள நிலையில், அக்குழுவில் செல்ல உள்ளோர் பட்டியல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி…

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் குழு 2 நாள் பயணமாக நாளை மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல உள்ள நிலையில், அக்குழுவில் செல்ல உள்ளோர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி இன அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீட்டு சலுகை பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது   வன்முறை வெடித்தது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. இதனால் மொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை சூழ்நிலை கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், கலவரத்தின் போது குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் 7-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அப்போதும் மொபைல் போனில் இணைய சேவைக்கான தடை தொடர்கிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு நாளை மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. இதன்படி தற்போது மணிப்பூர் செல்ல உள்ள எம்பிக்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கவ்ரவ் கோகாய், பீகாரில் இருந்து ஜனதா தள் கட்சியை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் கட்ஜ்,  மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், பௌலோ தேவி நெடாம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜவாத் அலி கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அதோடு, ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த மஹா மஜ்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஹமத் ஃபாஷில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முகமத் பஷீர், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரேமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷுஷில் குப்தா, சிவ சேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் ஷவாந்த், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோர் மணிப்பூர் செல்வோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த எம்பிக்கள் குழு நாளை பாதிக்கப்பட்ட மக்களையும், நாளை மறு நாள் மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.