கோவை அருகே புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான மாணவி. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியின் பெற்றோர் கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வீட்டில் இருந்த மாணவி கடந்த ஜூன் 11ம் தேதி மாலை 4 மணியளவில் எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியன.
மாணவியின் வீட்டருகே வசித்து வந்தவர் கேசவக்குமார். கல்லூரி மாணவனான இவரும் விஷம் அருந்திய மாணவியும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது மாணவியிடமிருந்து பணம் கேட்டு பெற்றிருக்கிறார் கேசவக்குமார். மேலும் ஒரு முறை மாணவியின் 2 சவரன் தங்க சங்கிலியையும் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி வீட்டிலிருந்து ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொடுக்கும் படியும் மிரட்டியுள்ளார்., இதனால் மாணவி, கேசவக்குமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
பின்னர் மாணவியை தொடர்ப்புக்கொண்ட கேசவக்குமார் பணம் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு விரக்தி அடைந்த மாணவி எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழப்புக்கு முயன்றுள்ளார்.
இந்த சூழலில்தான் சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த ஞாயிற்று கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாணவன் கேசவக்குமார் மீது உயிரிழப்புக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து கேசவக்குமாரை தேடி வருகின்றனர்.