கனமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கோயமுத்தூர் மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கோயமுத்தூர் மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைப்பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் கோயமுத்தூர், நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயமுத்தூர் மாவட்டத்தையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் நீர்வரத்து அணைக்கு விநாடிக்கு 1500 கன அடியில் இருந்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அகழி, அட்டப்பாடி, மண்ணார்குடி
உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 77அடியில் இருந்து 81 அடிக்கு உயர்ந்துள்ளது.

அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பவானி ஆற்றில் கலந்து, பின்னர் மீண்டும் பில்லூர் அணையை வந்தடையும் என்பதால் அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதனால் அணையில் அமைந்துள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது மின் உற்பத்தி செய்வதற்காக அணையில் இருந்து 6000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.