கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஜமேஷா முபின்(28) என்பவர் பலியானார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவு முகமை போலீசுக்கு
மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28),
முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ்
இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் முகமது
தவ்பிக்(25), உமர் பாரூக்(39), பெரோஸ்கான்(28) என மேலும் 3 பேரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறு பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த ஆறு பேரில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் மூன்று பேருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களில் முகமது அசாரூதீன், அப்சர் கான், பெரோஸ் இஸ்மாயில் உமர் பாரூக்,
பைரோஸ்கான் ஆகிய 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை
நடைபெற்றது.
இதற்காக 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று மீண்டும் ஆஜர்படுத்தினர். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நாளை நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இன்று ஆஜர் படுத்தப்பட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.