கோவை சம்பவம்: திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். கோவை, உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி ஒரு…

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார்.

கோவை, உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி ஒரு காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரடியாக சென்று இடத்தை ஆய்வு செய்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோவை மாநகர காவல்துறையினரின் நற்செயலை பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.