கோவை கார் வெடிப்பு வழக்கு; மேலும் ஒருவர் கைது!

கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம்…

கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 28 வயது மதிக்கத்தக்க ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்  மேற்கொண்ட விசாரணையை அடுத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு , அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க கோவையைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது தவ்பீக், உமர் பாரூக் , பெரோஸ் கான்ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், பின்னர் அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் திருவண்ணாமலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விக்ரம், விக்னேஷ் உள்பட 3 பேரிடமும், திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக சென்னையில் 5 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இப்ரீஸ் என்பவரை நேற்று இரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார். கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.