கோவை குண்டு வெடிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் – வானதி சீனிவாசன்!

கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்த தடுக்காத உளவுத்துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்ப்ட கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.