கோவை: பாஜக பந்த் போராட்டம் ஒத்திவைப்பு

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.  கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது. 

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து, கோவை மாநகரத்தில் அக்டோபர் 31ஆம் தேதி, கடையடைப்பு போராட்டம் நடத்த, அம்மாவட்ட பாஜக அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர்பாலாஜி உத்தமராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், கோவை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மாநில தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நேற்று உத்தரவிட்டு உடனடியாக விசாரணையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கோவை மாநகர வியாபாரிகளும், தொழிலதிபர்களும், தொழில்முனைவோரும் பாஜக மாநில தலைவரிடம், தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பு போராட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, மாநில தலைவரும் என்னுடனும், முக்கிய தலைவர்களுடனும் உரையாடி கோயம்புத்தூர் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இதனை ஏற்று, அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த இந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.