டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.
3 முக்கிய கோரிக்கைகளுடன் பிரதமரின் அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படியுங்கள் : செஞ்சி கோட்டையில் இன்று #UNESCO குழுவினர் ஆய்வு! பொதுமக்கள் பார்வையிட தடை!
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்புகிறார்.







