ட்விட்டரில் உலக தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் ஒரு வார்த்தை பதிவுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது ட்விட்டர் பக்கத்தில், democracy என பதிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் என்றும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, யூனிவர்ஸ் என்றும் ஒரு வார்த்தையில் பதிவிட்டன. இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர். இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் திராவிடம் என பதிவிட்டு, ஒற்றை வார்த்தை பதிவு ட்ரெண்டிங்கில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு எனவும், டிடிவி தினகரன் “அம்மா” எனவும் பதிவிட்டிருந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நிதி என்றும், சீமான் தமிழ்த்தேசியம் என்றும் பதிவிட்டுள்ளனர். அதேபோல, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் என்றும், கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் சமத்துவம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
வி.கே.சசிகலா “ஒற்றுமை” என பதிவிட்டுள்ளார். அதிமுகவில் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வி.கே.சசிகலாவின் இந்தப் பதிவு உணர்த்துகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், வறுமை ஒழிப்பு என பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா









