பீகாரில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதில் முக்கிய நிகழ்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளார்.
பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதலமைச்சராக இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தற்போதே அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், பீகாரில் நிகழ்ந்த இந்த அதிரடி அரசியல் மாற்றம் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தை அக்கட்சிகளின் தலைவர் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக பாஜக விமர்சித்து வரும் அதே வேளையில் இந்த மாற்றம் நல்ல தொடக்கம் என சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வரவேற்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், பீகாரின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கும், துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவிற்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் திரும்பியுள்ளது, நாட்டில் மதசார்பற்ற சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பதில் உரிய நேரத்தில் நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.








