கேரள மாநிலத்தில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு தேர்வாணையத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் பிந்து (42). இவரது மகன் விவேக் (24). இந்நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதி உள்ளனர். விவேக் எல்டிசி பிரிவில் லோயர் டிவிஷனல் கிளார்க் வேலைக்கான தேர்வு எழுதி 38வது ரேங்க் பிடித்துள்ளார். பிந்து எல்ஜிஎஸ் பிரிவில் லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் தேர்வில் 92வது ரேங்க் பெற்றுள்ளார். தாய், மகன் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கேரளத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவேக் கூறுகையில், ” அம்மாவும், நானும் ஒன்றாக தான் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தோம். ஆனால், நாங்கள் ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என்று நினைத்ததில்லை. அம்மா தான் இந்த இடத்துக்கு அழைத்து வந்தார். அப்பா எங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி மைய ஆசிரியராக இருந்து வருகிறார். அதேநேரத்தில் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கும் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார். இதற்கு முன்பு மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியை சந்தித்த பிந்து தனது நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அவருக்கும் அவரது மகனுக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








