மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவசரகால மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.
சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் நிலவரங்கள் தொடர்பாகவும், மீட்பு மற்று நிவாரணப் பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பிற மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் காணொலி காட்சியின் மூலமாக முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.







