அதிமுக – பாஜக இடையே சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது. கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் எல்.முருகன், சி.டி.ரவி, வி.கே.சிங், உள்ளிட்டோரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் கலந்துகொண்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை நள்ளிரவில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







