அனைவரும் அமைதி காக்க ராஜஸ்தான் முதலமைச்சர் வேண்டுகோள்

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால்…

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் என்ற தையல்கடைகாரர் நேற்று முன்தினம் அவரது கடையிலேயே இஸ்லாமியர்கள் இருவரால் கொல்லப்பட்டார்.

ஆடை தைக்க வருவது போல் கோஸ் முகம்மது, ரியாஸ் அக்தாரி எனும் இரு இளைஞர்களும் கன்ஹையா லாலின் கடைக்கு வந்துள்ளனர். அவருக்கு கன்ஹையா லால் அளவெடுத்துள்ளார்.

இதையடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு இருவரும் கன்ஹையா லாலை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதோடு, கொலை செய்த பிறகு அந்த இரு இளைஞர்களும், தாங்கள்தான் கொன்றோம் என்றும் அதற்கான காரணம் குறித்தும் வீடியோ வெளியிட்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் எச்சரித்துள்ளனர். அவர்களின் இந்த வீடியோ வைரலாகியது.

இதனையடுத்து, குற்றவாளிகள் இருவரும் நேற்று முன்தினமே கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் காரணமாக அங்கு மத கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, காவல்துறையினரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து 3வது நாளாக உதய்ப்பூரில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்ற உறுதியை தாம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்குமாறு மத தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.