ஸ்டெர்லைட் ஆலை மூடல் – இத்தனை பாதிப்புகளா?

ஸ்டெர்லைட்  ஆலை தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி வணிகர்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஸ்டெர்லைட்…

ஸ்டெர்லைட்  ஆலை தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி வணிகர்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் தாமிரத்தை (முக்கிய மூலப்பொருள்) நம்பி இயங்கி வரும்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இது புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்க வரும் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்கனவே பல கார் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது இந்தியாவின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது, மட்டுமல்லாமல் ஆண்டிற்கு 2,700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிக் கொடுத்தது. ஸ்டெர்லைட்,  காப்பரை தவிர, 220,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பாஸ்போரிக் அமில சப்ளையிலும் 12,00,000  மெட்ரிக் டன் சல்பூரிக் அமில  சப்ளையிலும் ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் ஸ்டெர்லைட் , காப்பர் மட்டும் அல்லாமல் பாஸ்போரிக், மற்றும் சல்ஃபியூரிக் அமிலத்தின் மிகப்பெரிய சப்ளையராகவும் திகழ்ந்தது.

2017லிருந்து 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  ஸ்டெர்லைட் காப்பர் 1.1 பில்லியன் அந்நியச் செலவாணியை ஈட்டியது. ஆனால் ஆலை மூடப்பட்ட பிறகோ, இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியது. தற்போது, சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

இந்தியா நிகர காப்பர் ஏற்றுமதியாளராக இருந்தபோது டன் ஒன்றுக்கு  $6,500 வரை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், தற்போதோ சராசரி விலையை விட 50% அதிகமாக, டன் ஒன்றுக்கு சுமார் $9,600 வரை கொடுத்து அந்நிய நாடுகளிடம் இருந்து காப்பரை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது . தற்போது நிலவி வரும் காப்பர் பற்றாக்குறையால், எலக்ட்ரிக் வாகனம், இரயில் மற்றும் மின்சாரம் போன்ற துறைகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை  4000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்கியது.  இந்த ஊழியர்களில் 70% க்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆலை மூடப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் , மறைமுகமாகவும் 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலையில் இருந்து தினமும் 1000 டேங்கர் லாரிகள் இயங்கி வந்தன.

இதன் மூலம் 9ஆயிரம் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் வாழ்வாதரம் பெற்றனர். ஆனால் தற்போதோ இவை அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு புறமிருக்க கொரோனா பேரிடர் காலத்தில், பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில்  இரண்டாயிரம் மெட்ரிக் டன்னுக்கும் மேலேனா ஆக்சிஜனை போர்க்கால அடிப்படையில் வழங்கி பலரது இன்னுயிரை காப்பாற்றியது ஸ்டெர்லைட் காப்பர் என்றும் கூறுகிறார்கள் வணிகர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.