12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி தேர்வினை எழுதி முடித்த மகிழ்ச்சியில் மாணவ – மாணவிகள், ஆடைகளில் வண்ணங்களை பூசியும், முட்டையை அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முழுவதும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை, 3,185 தேர்வு மையங்களில், 8,36,593 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 5,206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும் , சிறைவாசிகள் 90 பேரும் தேர்வை எழுதியுள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி நாளான இன்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன. இதையடுத்து , பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10 தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு பிறகு மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்ததால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள், தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதோடு, நண்பர்களின் முகத்தில் வண்ணங்களை பூசி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து திருவிக வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடித்த சில மாணவிகள் முட்டையை வீசியும், வினாத்தாள் மற்றும் பேப்பரை கிழித்து தூக்கி வீசி எரிந்தும் விளையாடி மகிழ்ந்தனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக, மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அப் பகுதியில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாயங்களை பூசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கொட்டும் மழையில் ஆடி பாடி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- பி.ஜேம்ஸ் லிசா









