#JammuKashmir சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் இடையே தள்ளுமுள்ளு!

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு…

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார். 

மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு- காஷ்மீர், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தேர்தல் இதுவாகும். ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டசபையில் நேற்று (நவ.6) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவ.7) காலை மீண்டும் கூடிய சட்டசபை கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மக்களவை எம்.பி-யான என்ஜினீயர் ரஷீத்தின் சகோதரர் குர்ஷித் அகமது எம்.எல்.ஏ, சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையை காண்பித்ததால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் காவலர்களை வரவழைத்து இந்த பிரச்னையை தீர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.