கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில்
குலசேகரம்புதூர் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி – நாகர்கோயில் ஒழுகினசேரி வரையிலான
நான்குவழிச்சாலை, கடந்த ஆறு மாதங்களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சாலையில் அமைந்துள்ள டோல்கேட் அருகே குலசேகரம்புதூர் – தேரூர் கிராமத்திற்கு
செல்லும் கிராம சாலையும் இணைகிறது. மேலும், கிராமச்சாலை இணையும் இடத்தில்
போதிய பாதுகாப்பு இல்லாமலும், மேடான பகுதி என்பதாலும் தினமும் வாகன விபத்துகள்
நடந்து வருகின்றன.
இதன் காரணமாக காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்தாலும், இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் தடுப்புவேலிகளை அப்புறப்படுத்தி விடுகின்றன. இதனால், விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நாகர்கோயிலை நோக்கி வந்த காய்கறி டெம்போ, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், குலசேகரம்புதூர் கிராம மக்கள் திடீரென நான்குவழிச்சாலையில் சாலை
மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை
துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்பை உறுதிபடுத்தி, தடுப்பு வேலிகள் அமைப்பதோடு, இணைப்பு சாலையை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
—கு. பாலமுருகன்




