தூய்மையான நகரம்; தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தூர்

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி…

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார். அதனடிப்பயில் தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

அதில் நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

முதல் இடம் பிடித்துள்ள இந்தூருக்கு வெற்றிக்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு மத்தியபிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினார். இந்தூருக்கு அடுத்தபடியாக குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மராட்டியத்தின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. 9-வது இடத்தை டெல்லி (என்டிஎம்சி) பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.