சித்திரைத் திருவிழா: அன்னதான உணவுகளுக்கான வழிகாட்டுதல்கள்

மதுரை மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சித்திரை பெருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பெருவிழா கொரோனா காரணமாக…

மதுரை மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சித்திரை பெருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பெருவிழா கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆண்டு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள் குறித்த வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளார்.

அதில், கள்ளழகர் மண்டகபடிகளில் வழங்கப்படும் பிரசாத உணவுகள், குளிர் பானங்கள் ஆகியவை செயற்கை சாயங்கள் சேர்க்காமல் சுகாதாரமாக வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த கூடாது. தற்காலிகமாக அமைக்கப்படும் உணவகங்கள், குளிர்பான விற்பனையகங்கள் செயற்கை சாயங்கள் அற்ற தரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டகப்படிகளில் அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி சான்றிதழை அவசியம் பெற வேண்டும். Foscos என்ற இணையதளம் மூலம் உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்றிதழை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பரசுராமன், மாணவ ஊடகவியலாளர் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.