சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் மதுரையில் மக்கள் திரண்டனர். சித்திரை திருவிழாவில் உச்ச நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் வைகை ஆற்றில் குவிந்தனர். கூட்ட நெரிசலில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (47) என்பவரும், மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (62) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இத்துயர் சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.