சீனாவின் அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான கமர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (COMAC), CE-25A என்ற மின்சார வர்த்தக விமானத்தை உருவாக்கியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோ நகரில் இந்த விமானத்தின் முதல் மனிதர்கள் உடனான சோதனைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றதாக சீன அரசுத் தொலைக்காட்சியான CCTV நேற்று (நவம்பர் 14) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தச் சோதனைப் பயணத்தின்போது இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானச் சோதனைப் பொறியாளர் விமானத்தில் இருந்தனர். பயணம் முழுவதும் விமானம் எதிர்பார்த்தபடி செயல்பட்டதுடன், அதிலுள்ள அனைத்து அமைப்புகளும் செயல்பாட்டு அளவீடுகளும் இயல்பான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 பயணிகள் பயணிக்கும் வசதி!
CE-25A என்பது சீனாவால் சுயமாக உருவாக்கப்பட்ட 10 டன் வகையைச் சேர்ந்த மின்சார வர்த்தக விமானமாகும். பிராந்திய மற்றும் நகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் COMAC நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் அதிகபட்சமாக 19 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானத்தின் அதிகபட்ச புறப்பாட்டு எடை 10 டன்னாகும். மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இது, அதிகபட்சமாக 2,400 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. மேலும், ஒருமுறை முழுமையாகப் பயணிக்கும்போது அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா சோதனைக்குப் பிறகு அடுத்தகட்ட வெற்றி!
CE-25A விமானத்தின் முதல் ஆளில்லா தானியங்கி சோதனைப் பயணம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது விமானிகள் மற்றும் பொறியாளருடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைப் பயணமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் விமானிகள் இல்லாமல் தானியங்கி முறையில் 19 சோதனைப் பயணங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை உருவாக்கும் திட்டத்தில் COMAC நிறுவனத்துடன் சீனாவின் ஏவுகணை ஏவுதல் தொழில்நுட்பக் கழகம் (China Academy of Launch Vehicle Technology – CALT) மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலை நோக்கி!
CE-25A மின்சார விமானம் தற்போது அடுத்தகட்ட ஒழுங்குமுறை அனுமதியைப் பெறும் நிலையை நெருங்கியுள்ளது. சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Civil Aviation Administration of China), CE-25A விமானத்திற்கான வகைச் சான்றிதழ் (Type Certification) விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தரங்களை மதிப்பீடு செய்து, உரிய அனுமதி பெறுவதற்கான நடைமுறையில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்சார விமானத் தொழில்நுட்பத்தில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் CE-25A விமானத்தின் இந்த வெற்றி முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.




