கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!

உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தொடக்கம் குறித்து அமெரிக்காவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீனா உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம்…

உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தொடக்கம் குறித்து அமெரிக்காவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீனா உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. தற்போது வரை உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. இதுவரை இந்த வைரஸ் உருவாவதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் உருவாகியதற்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டினார். அத்துடன் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அதற்கு அளித்து வந்த நீதியையும் நிறுத்தினார்.

அதன்பின், உலக சுகாதார அமைப்பு கொரோனா தோற்றம் குறித்து ஆராய சீனாவிற்கு குழு ஒன்றை அனுப்புவதாக அறிவித்தது. இதற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் விசாரணை குழு சீனா வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதன்பின் அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக வாய்ப்பில்லை என அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் உருவாவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இச்சம்பவம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அரசு உள்நோக்கத்துடன் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈராக்குக்கு கோடிக்கணக்கில் ஆயுதம் விற்பனை செய்தது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதை திசை திருப்ப அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை துவக்கியுள்ளது. கொரோனா தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்கா மீது சந்தேகம் உள்ளது. அதனால், அவர்கள் மீதும் உலக சுகாதார அமைப்பு விசாரணையை துவக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.