தாம்பரம் ரயில் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர்பிஎப் காவல் உதவி ஆய்வாளரை, பொதுமக்கள் சிறைபிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி சப்-வே வழியாக இளம்பெண் ஒருவர் நடந்து சென்றபோது அங்கு மதுபோதையில் இருந்த நபர், இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். அதனால் பயந்து போன அப்பெண் அங்கிருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆர்பிஎப் போலீஸ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட ஆர்.பி.எப் போலீஸ், ஒருவரை தாக்கினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி அவரை பிடித்து வைத்துக் கொண்டு, காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஆர்.பி.எப் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தான், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தபோதே, அங்கு வந்த ஆர்.பி.எப் போலீசார், சீனிவாசனுக்கு ஆதரவாக பேச தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாங்கள் அவரை அடிப்போம் என்று தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : இன்ஸ்டாவிலும் விஜய் – அதிவேக 10 லட்சம் Followers-ஐ பெற்று உலக சாதனை!!
இதனை அடுத்து, சீனிவாசனை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர் மதுபோதையில் இருப்பதால், நாளை விசாரணைக்கு வரவேண்டும் என எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தாம்பரம் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








