“தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை” – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

செஞ்சி சிறுமி வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது என உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 11 நாடகள் ஆகிறது. சிறுமி மாயமாகி 11 நாட்கள் கடந்தும் எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் தவித்து கொண்டிருக்கிறார்கள். 10 தனிப்படைகள் அமைத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அருகில் உள்ள கிணறுகள், குட்டைகள், குளங்கள் ஆகிய இடங்களிலும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மோப்ப நாய், ட்ரோன் என அனைத்துவிதமான உதவியுடனும் தேடுதல் நடைபெற்றுவருகிறது..

சிறுமி மாயமாகி 11 நாட்கள் ஆகியும் தேடுதல் பணியில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் – காவல்துறையையும் கண்டித்து திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தவெக ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது. முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.