மாடு முட்டிய குழந்தைக்கு பல் மற்றும் கண்ணில் அடி – தலையில் 4 தையல் என பெற்றோர் வேதனை!

சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஜாஃபர் சித்திக் மற்றும் ஹஸ்ரின் பானு.…

சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஜாஃபர் சித்திக் மற்றும் ஹஸ்ரின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா (9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹஸ்ரின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி உள்ளனர்.

இதனையடுத்து மாடு முட்டி காயமடைந்த குழந்தையை தந்தை ஜாஃபர் சித்திக் மற்றும் தாய் ஹஸ்ரின் பானு அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர். குழந்தைக்கு பல் மற்றும் கண்ணில் அடிபட்டுள்ளதால் அதற்கும் சிகிச்சை பார்க்க உள்ளதாகவும் , குழந்தையின் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருப்பதாக குழந்தை ஆயிஷாவின் தாத்தா தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.