ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல், மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக மாநாட்டு அழைப்பிதழை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தங்களது கட்சித்தொண்டர்களுடன் இணைந்து மதுரை காமராஜர் சாலை அரசமரம் விநாயகர் கோவிலில் வைத்து வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அழைப்பிதழை கொடுத்து மாநாட்டுக்கு வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது;
ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான அழைப்பிதழை மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று வழங்க உள்ளோம். ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான். மாநாட்டிற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்க எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதிமுக தொடக்கம் முதல் தற்போது வரை செய்துள்ள சாதனைகளை கண்காட்சியாக மாநாட்டில் இடம் பெற வைக்க முடிவு செய்துள்ளோம். திமுகவை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும். திமுகவுக்கு ஒரு பின்னடைவை உருவாக்கி கொடுக்கும். இனி மாநாடு முடியும் வரை அண்ணாமலை குறித்த கேள்வி கேட்காமல், மாநாடு குறித்து மட்டும் கேளுங்கள்.
இவ்வாறு செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
பி.ஜேம்ஸ் லிசா







