வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். அவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை ஆட்டோ இடித்து சென்றது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரின் கால் முறிந்ததால் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தலைமை செயலகத்திற்கு செல்வதற்காக தனது காரில் வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு விபத்தை பார்த்ததும் காரை நிறுத்தி விசாரித்தார். விபத்தில் அடிபட்ட நபர் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவரது வாகனத்தை விட்டு இறங்கிவிட்டார்.
இந்த விபத்து குறித்து உடனடியாக உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் செல்போன் மூலம் தகவல் அளித்தார். தலைமை செயலாளர் தகவல் கொடுத்ததால் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், ஆம்புலன்ஸ் வாகனமும் வந்தது. அடிபட்ட நபரை அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதன் பின்னர் இறையன்பு தலைமை செயலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதில் விபத்தில் அடிபட்ட நபர் வேளச்சேரியை சேர்ந்த குமரேசன் (34) என்பதும் இவர் பணி நிமித்தமாக பூக்கடை சென்று கொண்டிருந்த போது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானார் என்பதும் தெரியவந்தது. விபத்து நடந்ததை கண்டுகொள்ளாமல் செல்வதற்கு பதிலாக காரை விட்டு இறங்கிவந்து விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய தலைமை செயலாளர் இறையன்புவின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.