புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொணடு கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் விஜய் பதவியேற்றது முதல், அவ்வப்போது பல்வேறு அரசு கட்டிடங்கள், தொழிற்சாலைகள், விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை மெட்ரோ, எம்.சி. ராஜா விடுதி, திருவள்ளூர் சிப்காட், பெரம்பூர் பேருந்து நிலையம், சேத்துப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், இன்று சென்னை மாநகர ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட புழல் சிறை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறைத்துறை டிஜிபி சந்திப்பராய் ரத்தோர் உள்ளிட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் புழல் சிறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது முதலமைச்சர் விஜய், சிறைத்துறை காவலர்கள் மூலம் கைதிகளிடம் லஞ்சம் பெறப்படுகிறதா, விதிமுறைகளை மீறி செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறதா, சிறைக்குள் போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்குள்ள பெண் கைதிகளின் குறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் நிர்வாகம் தொடர்பான தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் சிறை நிர்வாகம், கைதிகளின் பாதுகாப்பு, உணவு தரம், போதைப்பொருள் தடுப்பு, செல்போன் பயன்பாடு மற்றும் லஞ்சப் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.