முதலமைச்சர் என்றால் சாதாரண மனிதன் என்று பொருள் என்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கவனம் ஈர்த்த 5 மாநில தேர்தல் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் முடிவில் யார் ஆட்சியை பிடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 மாநிலங்களிலும் பாஜக. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளாராக போட்டியிடும் பகவந்த் மான், தனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தால் அது தலைக்கு ஏறாது என்று தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “பஞ்சாப்பின் முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பஞ்சாப்பை மீண்டும் பழைய பஞ்சாப்பாக மாற்றுவேன். மக்களும் பழைய பஞ்சாப்பைதான் விரும்புகிறார்கள். இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆட்சியால் மாஃபியா அதிகரித்துள்ளது. ஒரு வேளை நான் முதல்வராகும் பட்சத்தில் பஞ்சாப்பின் கனவுகளை நிறைவேற்றுவேன். இங்கு பலர் பஞ்சாப்பை பேரிஸாகவும், லண்டனாகவும் மாற்ற விழைகிறார்கள். ஆனால் என் கனவு அது இல்லை. பஞ்சாப்பை மீண்டும் பஞ்சாப்பாக மாற்றுவதே எனது நோக்கம்” என்று தெரிவித்தார்.
நான் என்றும் மக்களுடன் இணைந்து என்றும் அவர்களுக்காக பாடுபடுவேன் என்று பேசிய அவர், புகழ் என்றும் எனது வாழ்வின் ஒரு பகுதிதான். முதலமைச்சர் என்றால் சாதாரண மனிதன் என்று பொருள். நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது என்றும் எனது தலைக்கு ஏறாது. அரசியலில் எனக்கு எதுவும் புதிதல்ல என்று பகவந்த் மான் பேசினார்.