மதுரையில் மு.க. அழகிரியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜுன் 1) மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 31) காலை 11.45 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். தொடர்ந்து, நேற்று (மே 31) மதியம் 1.05 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, அவனியாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது. பின்னர், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரான முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் மற்றும் மேயர் முத்து குடும்பத்தினர் பங்கேற்றனர். இதனையடுத்து, மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க.அழகிரி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகிரி வீட்டில் இரவு உணவு உட்கொண்டு விட்டு, தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.