சிதம்பரம் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து வழக்கு!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு 24 முதல்…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு 24 முதல் 27 வரை 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அறிவிப்பு பலகையை அகற்றச்சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும், தீட்சிதர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பலகையை அதிகாரிகள் அகற்றினர்.

கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீட்சிதர்கள் வைத்த பதாகை முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டுள்ளது என்றும், பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய விசாரணை நடத்தி, அதன் பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022ம் ஆண்டு மே 17ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 10 பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் கனகசபை உள்ளதால், நாளொன்றுக்கு 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்பதால் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கோவிலின் பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.