நெஞ்சுவலி செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கே என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக செயற்குழு கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அமமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதில் கட்சி வளர்ச்சிப் பணிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் அமமுகவில் அமைப்பு ரீதியான தேர்தல் நடத்துவதென்றும், தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்வார்கள் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி தோல்வி வரலாம். ஆனால் தமிழ்நாட்டில் மரியாதை உள்ள இயக்கமாக அமமுக திகழ்கிறது. அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் உள்ள கட்சியாக செயல்படுகிறது. நம்மிடம் உள்ள ஒரே குறை நம்மிடம் உள்ள நிர்வாகிகளிடம் பணவசதி இல்லாதது தான். அமமுகவில் இருந்து சிலர் கூண்டோடு வெளியேறி மாற்று கட்சியில் இணைந்தனர். ஆனால் அங்கும் பதவிகள் கிடைக்கவில்லை. அமமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்படுவார்கள். அவர்களால் சோபிக்க முடியாது.
அமைச்சர் செந்தில்பாலாஜி எப்போதும் துருதுருவென இருப்பவர். அதி புத்திசாலித்தனம் என்றைக்குமே ஆபத்து என சொல்வார்கள். ஆர் கே நகரில் நான் வெற்றி பெற்ற போதும் கூட முன்னதாகவே என் வெற்றியை கணித்தவர் செந்தில்பாலாஜி தான். செந்தில்பாலாஜியை விட திறமையானவர் அவர் தம்பி அசோக். ED சோதனையை செந்தில்பாலாஜி நினைத்து கூட பாத்திருக்க மாட்டார். அவர்களிடம் பொய் சொல்ல முடியாது. தற்போது நெஞ்சுவலி செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கே வந்துள்ளது.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








