செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காக பிரதமர் மோடியை 19 ஆம் தேதி தமிழகக் குழு சந்திக்கின்றது.
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கில் அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இதன் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 19ஆம் தேதி தமிழக குழு நேரில் சந்திக்கவுள்ளது.
பிரதமர் மோடி கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் 19ஆம் தேதி டில்லி செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளரை அனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இதனையடுத்து, ஏற்கனவே திட்டமிட்ட 19 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் டில்லியில் பிரதமரை சந்தித்து அழைப்பு விடுக்கின்றனர்.
-ம.பவித்ரா








