44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை புரிந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் இந்த செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நள்ளிரவில் இருந்து காலை 6 மணி வரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பார்பசால், பாகிஸ்தான், ரஷ்யா, பாலஸ்தீனம் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்துள்ளனர். அவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக, அனைவரும் ஒலிம்பியாட் குதிரைச் சின்னம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து, அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம், தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கம் முழுமையாகத் தாயர் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. சிறுவர்களுக்கு கூட செஸ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் படத்தை எங்கும் புறக்கணிக்கவில்லை. போட்டியைத் தொடங்கிவைப்பதே பிரதமர் தான் என பாஜகவின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார்.
மேலும், இதுவரை 187 நாடுகளில் 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முழுமையாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். வீரர்களை தமிழக பாரம்பரியப்படி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பிய பின்னர் அங்கு இதுகுறித்துப் பேசும் வகையில் நமது செயல்பாடு உள்ளது. முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாக இந்தியாவைச் சேர்ந்த நடுவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
-ம.பவித்ரா








