செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்துள்ள நிலையில், பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு செய்யப்பட்ட ஏற்பாட்டைப் போன்றே நிறைவு விழாவுக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் விளையாட்டுகள் மற்றும் கலாசாரங்களை எடுத்துரைக்கும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் இந்திய அணியும் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில், பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல, தனிநபர் பிரிவில் தங்கம் வென்று, சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்துகள்.
மேலும், தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வென்று, தேசத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும் என வாழ்த்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








