இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் அனைவரும் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனால், அந்த நாட்டில் அதிபரும், பிரதமரும் மாறினர்.
போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். 
இதனையடுத்து இரண்டு நாட்களில் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆவார். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாளைய தினம் தாய்லாந்தின் தலைநகர் பேங்காக் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







