தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்; உரிய முயற்சியே காரணம் – முதலமைச்சர்

உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்போர்ட் ஸ்டார் (Sport Star), சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை (South Sports…

உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்போர்ட் ஸ்டார் (Sport Star), சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை (South Sports Conclave) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்கு பின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாங்கள் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். இது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அதையும் தாண்டி அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடித்தளத்தில் திராவிட வளர்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “விளையாட்டுத் துறைகளில் முன்னோடி பாய்ச்சலை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது மிகப்பெரிய பெருமை. 2022ம் ஆண்டிற்கான போட்டியை உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்துவதை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

தமிழ்நாடு அரசு உரிய நேரத்தில் உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே இப்போட்டி சென்னையில் நடைபெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த மாநில அரசு ரூ.92.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் கவுண்டவுன் தொடங்கப்பட்ட நேரத்தில் இந்த மாநாடு நடப்பது மிகவும் சரியானதாக உள்ளது.” என்று கூறினார்.

விளையாட்டுகளை பொறுத்த அளவில் நானும் கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் உள்ளவன்தான் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.