செஸ் ஒலிம்பியாட் போட்டி பணிகள்- அமைச்சர் ஆய்வு

44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் வரும் 20ம் தேதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில்…

44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் வரும் 20ம் தேதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், இன்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது வரும் 28ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழக முதல்வர் இந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 22 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அரங்கம் ஒன்றில், 49 டேபிள்கள் அமைக்கப்பட்டு 49 அணிகள் பங்கேற்கின்றன.

52 ஆயிரம் சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் அரங்கம் இரண்டில் 128 டேபிள்கள் அமைக்கப்பட்டு 128 அணிகள் பங்கேற்று மொத்தம் 187 நாடுகளில் இருந்து ஆண் பெண் என 343 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் 90 சதவீதம் முடிவுற்ற நிலையில் வரும் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமை பெறும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் குக் கிராமங்களில் செஸ் போட்டிகள் என்ன என்பது தெரியாத நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியால் பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்தி வாயிலாகவும், தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாகவும் எடுத்துச் சென்று இப்போது அவர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் செஸ் போர்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அறிவு சார்ந்த இந்த விளையாட்டை தெரிந்து கொண்டு அறிவிலும், மனவலிமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதல்வர் இந்த முயற்சியை இங்கே மேற்கொண்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.