44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் தொடக்க விழாவிற்கு இணையாக பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்தன.
செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதிலிருந்து சுமார் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அகார்டி டிவோர்கோவிச், அந்த அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் தொடக்கத்தில் நடைபெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குரல் பின்னணியில் எதிரொலிக்க தமிழ் மண் என்கிற பெயரில் தமிழரின் வரலாற்று பெருமைகளை சித்தரித்து நடைபெற்ற கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் தமிழ் மண் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வீரப்பாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரபோராட்ட வீரர்களின் பெருமைகளை போற்றும் வகையில் கமல்ஹாசன் குரல் பின்னணியில் எதிரொலிக்க அதற்கேற்ப கலைஞர்கள் நடித்துக்காட்டியும், நடனமாடியும் பார்வையாளர்களை பரவப்படுத்தினர்.
டிரம்ஸ் இசையில் உலகப் புகழ்பெற்ற சிவமணி, வீணை இசையில் முத்திரை பதித்த ராஜேஸ் வைத்தியா, மற்றும் கிட்டார் இசையில் ஜாம்பவானாக திகழும் ஸ்டீபன், புல்லாங்குழல் இசையில் புகழ் பெற்று திகழும் நவீன் ஆகியோர் இணைந்து வழங்கிய பியூசன் இசை நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடத்திய போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற மும்பையைச் சேர்ந்த ”we unbeatable” குழுவினரின் சாகசங்கள் நிறைந்த நடன நிகழ்ச்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், சர்வதேச செஸ் வீரர்கள், ரசிகர்களும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நிறைவு விழா நடைபெற்ற மேடையின் திரையில் ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை முன்னாள் முதலமைச்சர்களை கவுரப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன.









