சென்னை நூறடி சாலை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தொடர் மழை காரணமாக காலை 6 மணி அளவில் பெட்ரோல் நிலையம் அருகில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் குறுக்கே விழுந்திருந்த மரக்கிளைகளை அகற்றினர். மரம் சாய்ந்த போது வாகனங்களோ, பொது மக்களோ அந்த பகுதியை கடக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெரியார் ரோடு பகுதிகளில் மரக்கிளை முறிந்தும், மரம் சாய்ந்தும் விழுந்ததால் மரங்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்வது கிடையாது. கடந்த 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஜூன் மாதத்தில் சுமார் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த வருடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜூன் மாதத்தில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். அதேபோல 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் 3 மடங்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது.-1996ஆம் ஆண்டில் ஜூன் 14 ஆம் தேதி சென்னை துறைமுகம் 217,5 மி.மீ சென்னை நுங்கம்பாக்கத்தில் 347.9 மி.மீ மழை பதிவானது.








