சென்னை சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 6ல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் காவல்துறை சார்பில் 2,500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமராக்களில் 6ல் ஒரு கேமரா செயல்பாடின்றி பழுதடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையின் கிழக்கு மண்டலத்தில் 3,856 கேமராக்களும், மேற்கு மண்டலத்தில் 639 கேமராக்களும், வடக்கு மண்டலத்தில் 1,815 கேரமாக்களும். தெற்கு மண்டலத்தில் 4,817 கேமராக்களும் செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த 2021-2022ஆம் ஆண்டு சிசிடிவி பரமரிப்பிற்காக ரூ.1.17 கோடி ஒதுக்கியது. இந்த ஆண்டின் பரமாரிப்பு பணிகளுக்காக ரூ.2. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், கேமராக்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
செயல்பாடின்றி உள்ள சிசிடிவி கேமராக்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என்றும், இதனால் குற்றசெயல்கள் அதிகரிக்கக்கூடும் எனவும், குற்றங்கள் நிகழும் போது, குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் மொத்தம் எத்தனை சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்பதை கணக்கிட சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 70,000 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், மேலும் 75 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, சென்னை மாநகரில் உள்ள மொத்த சிசிடிவிக்களின் எண்ணிக்கை விரைவில் 1.50 லட்சமாக உயர்த்தப்படும் என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.







