“சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47% நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, …

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47% நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி,  புழல்,  சோழவரம்,  செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை ஏரிகள் சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்து வருகின்றன.  இந்த ஏரிகளின் மொத்த நீா் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.  இதிலிருந்து சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காகவும், தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காகவும் தினமும் சுமாா் 1,000 மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் நீடிப்பதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் இருப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது.  இந்த நிலையில்,  நேற்றைய நிலவரப்படி, சென்னை குடிநீா் ஏரிகளில் மொத்த நீா் இருப்பு 5,556 மில்லியன் கன அடி அதாவது, 47.26% மட்டுமே உள்ளது.

சென்னைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி நீா் குடிநீருக்காக தேவைப்படுகிறது.  அதன்படி, தற்போது இருக்கும் நீரைக்கொண்டு இன்னும் 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்:

நேற்றைய நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 21.22 அடியும், 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 1.98 அடியும்,  21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 19.51 அடியும்,  36.61 அடி உயரம் கொண்ட கண்ணன் கோட்டை ஏரியில் 31.09 அடியும்,  24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 16.62 அடியும் நீா் இருப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.