சென்னை: துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்து; சிறுமி பலி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையின் வளாகத்தில் உள்ள இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர் சங்கர்.…

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையின் வளாகத்தில் உள்ள இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு ஹரிணி என்ற 6 வயது மகள் உள்ளார். இவர் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சங்கர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹர்லிக்ஸ் சாலையில் உள்ள பி எம் எஸ் டவர் என்ற கட்டிடத்தில் ஃபேப் இந்தியா என்ற பிரபல துணிக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சங்கர் வாகனங்கள் ஒழுங்குபடுத்தும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு சங்கர் பணி செய்து கொண்டிருந்த போது சங்கரின் மனைவி வாணி மற்றும் அவருடைய மகள் ஸ்ரீ ஹரிணி அங்கு வந்துள்ளனர். வளாகத்தில் உள்ள 20 அடி அகலம் கொண்ட ஸ்லைடிங் கேட்டை திறக்கும் போது அந்த கேட் சிறுமி ஸ்ரீஹரிணி மீது விழுந்துள்ளது. இதில் சிறுமியின் தலை மற்றும் உடல் முழுவதும் நசுங்கிய நிலையில் படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு  சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.அங்கு பொருத்தப்பட்டு இருந்த ஸ்லைடிங் இரும்பு கேட் முறையான பாதுகாப்பு அம்சம் இன்றி பொருத்தப்பட்டிருந்ததால் கேட் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஸ்ரீ ஹரிணி உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இதே போல ஸ்லைடிங் கேட் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தான் இதே போல் கீழ்ப்பாக்கம் பகுதியில் இந்த துயரம் சம்பவம் நடைபெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.