மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன், என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு இதுவரை, ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகளுக்கு, 58 கோடியே 33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதனை அடுத்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.







