ரயில்வே தண்டாவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி உயிரிழந்தார். உடலை உறவினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர்.
சென்னையை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் உடல் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்பு பாதை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு
உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் மூலம் அவர், சென்னை எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை பகுதியைச் சேர்ந்த பிரபு(40) என்பது தெரிய வந்தது. இவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விரைவு ரயிலில் அடிபட்டு இரண்டு துண்டாக வீசப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரபுவின் உறவினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெ. வீரம்மாதேவி








