கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை- சென்னை மாமன்ற கூட்டத்தில் எழுந்த குற்றச்சாட்டு

வார்டு பணிகள் குறித்த விபரங்களை வழங்காமல் அதிகாரிகள் கவுன்சிலர்களை அலட்சியமாக நடத்துவதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற  கூட்டம் மேயர் ப்ரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. …

வார்டு பணிகள் குறித்த விபரங்களை வழங்காமல் அதிகாரிகள் கவுன்சிலர்களை அலட்சியமாக நடத்துவதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற  கூட்டம் மேயர் ப்ரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப் சிங்பேடி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

மாமன்றக் கூட்டத்தின் நேரம் இல்லா நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பினர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் ரேணுகா ஆய்வுகளின்போது, வார்டுகளில் மேற்கொள்ளப்படும், பணிகள் குறித்த உரிய தகவல்களை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தருவதில்லை என்று குற்றம்சாட்டினார். கவன்சிலர்கள் என்றாலே அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜெயராமனும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ஐயூஎம்எல் கவுன்சிலர் பாத்திமா, தற்போது உள்ள மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றார். அதிகாரிகள் அனைவரையும் மொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையடுத்து பேசிய மேயர் ப்ரியா, வார்டு பணிகள் குறித்து உரிய தகவல்களை கவுன்சிலர்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கிடையே  மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்வற்றை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிகமாக குறைவான தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்காமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் இன்று சென்னை மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

– நிஷாந்த்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.