தன்னிடம் கேட்காமல் தக்காளியை பயன்படுத்தியதால், கோபமடைந்த மனைவி தனது குழந்தையுடம் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வால் சில உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளில் இனி தக்காளியை பயன்படுத்தமாட்டோம் என அறிவிக்கும் அளவிற்கு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை வர காரணமாக தக்காளி அமைந்தது. ஹோட்டல் நடத்தும் சஞ்சீவ் பர்மன், சமீபத்தில் தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியை பயன்படுத்தியதால், பெரும் சண்டை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபமடைந்துள்ளார். இது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய பிரச்சினையாகி உள்ளது. இதனால் கோபமடைந்த சஞ்சீவின் மனைவி தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
அவர் எவ்வளவு தேடியும் அவரது மனைவியும், குழந்தையையும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே உதவிக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். சஞ்சீவ் புகார் அளித்ததை மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். சஞ்சீவின் மனைவியை தொடர்பு கொண்டு வருவதாகவும் அவரை விரைவில் கண்டுபிடிப்பதாகவும் போலீசார் உறுதியளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.







